Corona (Covid-19)
கோயம்பேடு சந்தையில் அதிரடி நடவடிக்கை! வியாபாரிகள் அதிருப்தி!
கோயம்பேடு சந்தையில் 600 கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தலைநகரான சென்னையில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறி மற்றும் பழங்கள் கிடைக்குமிடமாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து இன்று மாநகராட்சி ஆணையர் வியாபாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஆனால் அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலோசனை கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் தொட்டு ஒருநாள் கூட கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் கோயம்பேடு மார்க்கெட்டை மூட வேண்டி வரும்” என கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது சிஎம்டிஏ. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
One more seller tests positive in corona in Koyembedu market