Latest News
இரவு நேர ஊரடங்கு- குஜராத் அரசு அறிவிப்பு
ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதன் மூலம் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது.
இதற்கிடையில், தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் 50 முறை உருமாற்றம் அடைந்துள்ளதால் இதனின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி,இந்தியா முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிரா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள 8 முக்கிய நகரங்களில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை( நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,அகமதாபாத்,காந்திநகர், சூரத்,ராஜ்கோட்,வதோதரா,பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜுனகர் ஆகிய 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களில் நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரையிலான இந்த இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அவசர தேவை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
