ஸ்டாலினை விளாசும் நமது அம்மா

கொள்கை ஒன்றுமில்லை ; எல்லாம் பதவி ஆசை – ஸ்டாலினை விளாசும் நமது அம்மா

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர் சந்திப்பில் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக இடம் பெறுமா? என ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 23ம் தேதி தேர்தல் முடிவு வெளியான பின்பு இதுபற்றி பேசுகிறேன் என பதில் அளித்தார்.

ஸ்டாலின் இந்த பதில் விவாதத்தை துவங்கி வைத்துள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் திமுக டீல் பேசி வருவதாக கூறி தமிழிசை பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதை நிரூபிக்கும் வகையில் ஸ்டாலின் பதில் கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான நமது அம்மாவில் இன்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம். திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தால் மட்டுமே அங்கம் வகிப்போம் என ஸ்டாலின் பதில் கூறியிருக்க வேண்டும். ஆனால், 23ம் தேதிக்கு பிறகு பதிலளிக்கிறேன் என கூறியுள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது? இதன் சூட்சமம் என்ன? மத்தியில் பதவிகளை பிடிப்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருக்கிறாரே தவிர, கொள்கை கோட்பாடுகள் எதுவும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.