பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அக்டோபர் மாதம் 1908ம் ஆண்டு 30ம் தேதி பிறந்த முத்துராமலிங்க தேவர் 1963ல் இதே அக்டோபர் 30ல் மறைந்தார். அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தமிழக தலைவராகவும் தேசிய துணை தலைவராகவும் இவர் இருந்தார். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்ற பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடியவர். நேதாஜியின் படையில் பங்காற்றியவர் , முதுகுளத்தூர் தொகுதியில் நின்று எம்.எல்.ஏவாக ஜெயித்தவர்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்”. “அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர், அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்” என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம், தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.
இப்படி பல சாதனைகளை செய்த பசும்பொன் அய்யா மிக சிறந்த முருக பக்தராவார். திருமணம் செய்து கொள்ளாமல் ஐம்புலன்களை அடக்கி ஒரு சித்தர் போல வாழ்ந்தவர். இவரது நினைவிடம் ஒரு சித்தரின் ஜீவசமாதி போல்தான் பரமாரிக்கப்படுகிறது. இவரது நினைவு நாளில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வருவர். இவரை ஒரு கண்கண்ட கடவுளாக நினைத்து மக்கள் வணங்கி வருகின்றனர்.
இன்று அவரின் நினைவு நாள் இன்று அவரை நினைவு கூர்வோம்.