Entertainment
கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் கா.மு.சுரேஷ். இவர் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தார். 2011-ல் இவரை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக, ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில்தான் தன்னைக் கொலை செய்ய அவர்கள் முயன்றதாக, சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 7-வது நபராக சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தங்கமாரியப்பன் முன்னிலையில் நேற்று ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோன்று, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தன. அந்த வழக்குகளிலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராயினர்