cinema news
மணிரத்னத்தை நடிக்க அழைத்த ரஜினியின் மகள்! நடிக்க மறுத்தது ஏன்?
இயக்குனர் மணிரத்னத்தைத் தன்னுடைய படத்தில் நடிக்க ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக பொதுவிழாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் அதிகம் தலைகாட்டாத மணிரத்னம் நேற்று சமூகவலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதனை மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி தன்னுடைய சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டார்.
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களான குஷ்பூ, மாதவன் உள்ளிட்டோர்களும் கலந்துகொண்டு மணிரத்னத்திடம் தங்கள் கேள்விகளைக் கேட்டனர். அப்போது ரசிகர் ஒருவர் மணிரத்னத்திடம் ‘உங்களுக்கு எப்போதாவது நடிக்கவேண்டும் என்று தோன்றியதுண்டா? உங்கள் நண்பர்கள் யாரும் உங்களை நடிக்க அழைக்கவில்லையா?’ எனக் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த மணிரத்னம் ‘ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தன் படத்தில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை முற்றிலுமாக நிராகரித்தேன். ஏனென்றால், “ஒரு இயக்குனராக படங்களில் நடித்துவிட்டு இயக்க சென்றால், நடிகர்கள் என்னிடம், ‘நீங்கள் எப்படி நடிக்கிறீர்கள்? என்று என்னிடமே கேள்வி கேட்பார்கள். அதுவே நான் என்னுடைய வேலையை மட்டும் செய்தால் எனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பிற நடிகர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்கவிடுவேன்.” எனக் கூறியுள்ளார்.