தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடந்தது. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், தற்போதுள்ள நிலவரப்படி பாஜக 343 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 93 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதர கட்சிகள் 106 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. எனவே, மோடி பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வது உறுதியாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகிறது
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் 4 அல்து 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். இதில் ஆச்சர்யமாக 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக, நாம் தமிழர் கட்சிகளை பின் தள்ளிவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3ம் இடத்தில் உள்ளனர்.
இக்கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உருவாகியிருப்பது கமல்ஹாசனுக்கும், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.