பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேனர்களை வைத்தால் இனிமேல் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சாலைகளில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் பேனர்களை வைக்கக்கூடாது என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?’ என பதிவிட்டிருந்தார்.
மேலும், நான் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியபடி திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேனர் வைத்தால் நான் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.