lorry strike

நாளை முதல் லாரி ஸ்டிரைக் துவக்கம் – 45 லட்சம் லாரிகள் ஓடாது

புதிய மோட்டார் வாகன சட்ட அபராத விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கவுள்ளனர்.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதோடு, சுங்க சாவடிகளிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் பெட்ரோல் மற்றும் டீசர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே, லாரி உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பெட்ரோலை ஜி.எஸ்.டி முறைக்குள் கொண்டு வர வேண்டும் என நாடெங்கும் கோரிக்கை எழுந்து வருகிறது. தற்போது அதை தீவிரமாக வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருதல், சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சுமார் 45 லட்சம் லாரிகள் இயங்காது எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் எழுந்துள்ளது.