இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் படாமல் இருந்திருந்தால் 73,000 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி வரை இருக்கும் இந்த ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் புதிதாக தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதே இதற்குக் காரணம்.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 23,452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆறுதலாக சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள நிதி ஆயோக் குழு உறுப்பினர் வி கே பவுல் ‘ சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் 23,000 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒருவேளை ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்த நேரத்திற்கு இந்தியா முழுவதும் 73,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர் .’ எனத் தெரிவித்துள்ளார்.