கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தமிழ் எழுத்தாளர்! கோவையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தமிழ் எழுத்தாளர்! கோவையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

கோவையில் பிரசவ வலியில் பாதித்த ஒரிசா மாநிலப் பெண்ணுக்கு எழுத்தாளர் சந்திரன் சாலையில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வெனிஸ் திரைப்பட் விழாவில் விருது பெற்ற திரைப்படம் விசாரணை. இந்த திரைப்படத்திற்கு பெரும் தூண்டுகோலாக இருந்தது “லாக்-அப்” என்ற சுய அனுபவ நாவல். அந்த நாவலை எழுதிய எழுத்தாளர் சந்திரன் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.

அந்த பகுதிக்கு அருகே வெளிமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட அவரது கணவர் அந்த பெண்ணை தூக்கி  சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு முன்னர் உட்கார வைத்து விட்டு ஆம்புலன்ஸுக்காக அழைத்துள்ளார்.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குத் தாமதமானது. அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுபவரான எழுத்தாளர் சந்திரனுக்கு தகவல் செல்ல அவர் அங்கு வந்துள்ளார். ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் பாதி வழியிலேயே பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது. இதனால் சாலையிலேயே நிறுத்தி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

வேறு வழியின்றி சந்திரன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் கோயம்புத்தூர் பகுதிகளில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்திரனின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர். அதன் பின் வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.