Latest News
கிருஷ்ண ஜென்மபூமி மீட்க மனு- தள்ளுபடி செய்த நீதிமன்றம்
ராமஜென்ம பூமி என அழைக்க கூடிய அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது இராமர் பிறந்த இடம் என்பது இடித்தவர்களின் வாதமாகும்.
சர்ச்சைக்குரிய இந்த வழக்கு பல நிலைகளை கடந்து தீர்ப்புகளும் வந்து இராமருக்கு கோவில் கட்டுவதற்கு பூமி பூஜையும் போடப்பட்டு விட்டது.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என கூறப்பட்ட 32 பேரும் குற்றவாளிகள் இல்லை என நேற்று தீர்ப்பு கூறப்பட்ட நிலையில் இவ்வழக்கு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் கிருஷ்ண ஜென்மபூமியை மீட்க வேண்டும் என புதிதாக வழக்கறிஞர்கள் விஷ்ணு ஜெயின், ஹரிசங்கர் ஆகியோர் புதிய மனுவை தாக்கல் செய்தனர். மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் புகழ்பெற்ற மதுரா நகரம் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் பிறந்த இடமாகும். இங்கு இவருக்கு கோவில் உள்ளது. மதுராவின் ஒவ்வொரு இடமும் இங்கு புனித இடமாக கருதப்படுகிறது.
முகலாயர் ஆட்சி நடந்தபோது மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் அருகே ஒரு பகுதி இடிக்கப்பட்டு அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டு அதற்கு ஈத்கா மசூதி என வைத்துள்ளனர்.
இதை சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் கிருஷ்ண ஜென்ம பூமி முழுதாக மீட்கப்பட வேண்டும் என கூறினர். இதற்கு பதிலளித்த நீதிபதி, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடரும் என்ற அடிப்படையில் சட்டம் உள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கைக்கு முகாந்திரம் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்தார்.