நமக்கு வராது என நினைக்க வேண்டாம்- சேரனின் வேண்டுகோள்

நமக்கு வராது என நினைக்க வேண்டாம்- சேரனின் வேண்டுகோள்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் தொடர்ச்சியாக இறந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கேவி ஆனந்த், பாண்டு, கோமகன் என பலரும் கொரோனா தொற்றால் உயிரிழந்து வரும் நிலையில் இயக்குனர் சேரனின் வேண்டுகோள் என்னவென்றால்,

கரோனா தொற்றை முறியடிக்க மக்கள் அனைவரும் அக்கறையோடு முயல்வதே தீர்வு. என்னதான் அரசும் அரசுத் துறைகளும் முயன்றாலும் தனி மனித சிந்தனையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முன்னேற்பாடு இல்லாதவரை கொரோனா ஆபத்துகளைக் கடப்பது கடினம். நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம்.

கரோனாவிற்கு உருவமோ அல்லது ஒரு மனிதனைச் சித்திரவதை செய்து ரத்தம் கக்கிச் சாகும் குணம் இல்லாததால் யாருக்கும் அதைப் பற்றிய பயம் இல்லையோ என்னவோ. என் நண்பர் ஒருவர்.. எல்லா வசதிகளும் இருந்தும் அவரை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு கொடுமையானது இந்நோய்.

அத்தியாவசியத் தேவைகளுக்கான தொழில் செய்பவர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவத்துறை, போக்குவரத்துத் துறையில் பணிபுரிவோர், காவல்துறை, செய்தித்துறை. இவர்கள் எல்லாம் நம் பாதுகாப்புக்காகக் களத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அவர்களை இந்த சிரமத்திற்கு ஆளாக்கப் போகிறோம்.

ஆகவே நமக்கு எங்கிருந்தோ எல்லாம் கிடைத்துவிடுகிறது என்று கருதாமல் நோயை விரைவில் விரட்டியடிக்க ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. ஆகவே நோய் இருப்பதற்கான காரணம் தெரிந்த உடனே சிகிச்சை எடுங்கள். நோயற்றவர்கள் வராமல் தடுக்க முழு முயற்சி எடுங்கள்”. இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.