வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தை நீக்குமாறு நடிகரும்,எம்.எல்.ஏமான கருணாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று அந்த வசனமும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதற்கு கருணாஸ் நன்றியும் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்துள்ள ”அசுரன்” திரைப்படத்தில் “ஆண்ட பரம்பரை நாங்கதான்… எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக்கிட்டேருந்து எங்களுக்கு எடம் வந்ததா! என்ற வசனம் வருமிடத்தில் எதிர் தரப்பினர் பேசும் உரையாடலில் “எத்தனை நாளாட சொல்லிக்கிட்டே இருப்பீங்க ஆண்ட பரம்பரைன்னு” என்று முக்குலத்தோர் சமூக மக்களை இழிப்படுத்தும் விதமாக இக்காட்சி வழியாக வரும் உரையாடல் அமைந்திருக்கிறது.
மேற்கண்ட திரைப்பட வசனம் எங்கள் சமூக மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதால் இந்த வசனத்தை நீக்குமாறு இயக்குநர் வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்தேன்.
எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் உடனடியாக அந்த வசனத்தை நீக்கியுள்ளார். அவருக்கும், அசுரன் படக் குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றியை முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் கருணாஸ் கூறியுள்ளார்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் தனுஷ் மகன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.