கர்ணன் படத்தலைப்பை பயன்படுத்த எதிர்க்கும் சிவாஜி ரசிகர்கள்

கர்ணன் படத்தலைப்பை பயன்படுத்த எதிர்க்கும் சிவாஜி ரசிகர்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கர்ணன். இப்பட தலைப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்த காலத்தில் நடித்து புகழ்பெற்ற கர்ணன் படமும் உள்ளது.

இந்த நிலையில் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பாக அந்த கர்ணன் பெயரை தனுஷ் படத்துக்கு வைக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவாஜி சமூகநலப்பேரவை பொதுச் செயலாளர் கே.சந்திரசேகரன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

”சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘கர்ணன்’ திரைப்படத் தலைப்பை மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷுக்கு சிவாஜி சமூகநலப்பேரவை எழுதிய கோரிக்கை கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

தனுஷுக்கு வணக்கம்.

தாங்கள் தற்போது ‘கர்ணன்’ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம்.

நடிகர் திலகம் சிவாஜியின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ‘கர்ணன்’ என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகத்தின் ‘கர்ணன்’ திரைப்படம்தான்.

ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில், அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில்தான் தாங்கள் நடித்து ஏற்கெனவே ‘திருவிளையாடல்’ என்ற தலைப்பில் திரைப்படம் வெளிவரவிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்பிறகு ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரைப்படம் வெளிவந்தது.

அதே சமயத்தில். தாங்கள் நடித்து வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அதுபோலவே. ‘ஆண்டவன் கட்டளை’, ‘ராஜா’, ‘பச்சை விளக்கு’ என்று நடிகர் திலகம் நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

அதுபோன்ற சமூகப் படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதற்கு யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், ‘சரஸ்வதி சபதம்’, ‘திருவிளையாடல்’, ‘கர்ணன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடாது. ஏனெனில் அந்தத் திரைப்படத் தலைப்பின் தனித்துவம் அப்படி.

‘கர்ணன்’ என்றாலே கொடுப்பவன், கொடைவள்ளல்தான். ஆனால், தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம். அதில் ‘கர்ணன்’ கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு சமூகத் திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

இது லட்சோபலட்ச நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடியதாக அமையும். எனவே. ‘கர்ணன்’ என்ற தலைப்பினை மாற்றி அமைத்திடவேண்டுமென நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடித்த திருவிளையாடல் படம் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பால் லேசாக மாற்றப்பட்டு திருவிளையாடல் ஆரம்பம் என வைக்கப்பட்டது.