நடிகர் விஜய் தெரிவித்த கருத்திற்கு பதிலடியாக அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயஸ்ரீ மரணத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனரையும், பேனர் தயாரித்தவரையும் குறை சொல்கிறார்கள் எனக்கூறினார். அதேபோல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அவர் அதிரடியாக பேசினார்.
ஆளும் அதிமுக தரப்பினரையே அவர் கூறியிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். விஜயின் இந்த பேச்சு அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘விஜயின் பேச்சை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என மக்கள் முடிவெடுக்க வேண்டியது இல்லை. பரபரப்பான கருத்தை கூறினால் படம் ஓடிவிடும் என்பதற்காகவே இப்படி பேசி வருகிறார்கள். அவரை முதல்வரிடம் அழைத்து சென்ற பேச வைக்கவில்லை எனில் சர்கார் படமே வந்திருக்காது. அது அவரின் மனசாட்சிக்கு தெரியும். யாரை எங்கு வைக்க வேண்டும் என தெரிந்தே மக்கள் அதிமுக ஆட்சியை அமர வைத்துள்ளனர்’ என அவர் பேசினார்.