Latest News
மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் மயில் சிலை மாயமான வழக்கு-உயர் நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு
கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னை வனநாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாயமானதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விரைந்து முடிக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நவீன கருவிகள் கொண்டு தேடுதல் பணிகளும் நடைபெற்றன. இந்நிலையில் இவ்வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த நேரத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தர், “மயில் அலகில் மலர்தான் இருந்தது என்பது தெரிய வந்துள்ளது. உண்மைக் கண்டறியும் குழு விசாரணையை முடிக்க 6 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசைன் அகமது ஜின்னா, “மயில் சிலை மாயமானது குறித்த விசாரனை முடியும் நிலையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளது. மேலும் சிலையைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” எனச் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் மனுதாரர் ரஙராஜன் நரசிம்மர், “இவ்வழக்கில் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது” எனக் குற்றம் சாட்டினார். இறுதியாக, “உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். மயிலின் அலகில் இருந்தது மலர் தான் என்பதற்கான ஆதாரங்களை இந்து சமய அறநிலையத்துறை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை ஜூன் இரண்டாம் வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அலகில் மலருடன் கூடிய மயில் சிலையை தயாரிக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.