cinema news
கௌதம் மேனனை எச்சரித்த ஜெ.வின் அண்ணன் மகன் – எதற்கு தெரியுமா?
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கதையை வெப்சீரியஸாக இயக்கி வரும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு அவரின் அண்ணன் மகன் தீபக் எச்சரித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரின் வாழ்க்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். இதில், இயக்குனர் விஜய் ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இதில்,ஜெ.வின் வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். அதேபோல், இயக்குனர் கவுதம் மேனன் ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றி வெப்சீரியஸாக எடுக்கவுள்ளார். இப்படத்தில் ஜெ.வின் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ஜெ.வின் அண்ணன் மகன் திபக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கௌதம் மேனன் ஒரு அரசியல்வாதியை மையமாக வைத்து வெப் சீரிஸ் எடுத்துள்ளதாக மீடியாக்களின் செய்திகள் மூலம் அறிந்தேன். அதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க, ‘குயின்’ எனப் பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். முன்னதாக இயக்குநர் ஏ எல் விஜய் என்னைச் சந்தித்து என் அத்தையின் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் எடுக்கப்போகும் ‘தலைவி’ படம் பற்றி கூறினார். அவருடைய முழுத் திரைக்கதையையும் எனக்கு கூறினார். என்னிடமிருந்து படமெடுக்க அனுமதிக் கடிதமும் பெற்றார். என் அத்தையின் பெயரை எந்த வகையிலும் களங்கப்படுத்த மாட்டேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கௌதம் மேனன் தன் வெப் சீரிஸ் பற்றி அறிவித்துள்ளார். அதில் பிரபல அரசியல்வாதியை மையமாக வைத்து குயின் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் எந்த அரசியல்வாதி எனக் குறிப்பிடவில்லை. என் அத்தையின் பெயரை பயன்படுத்தி என் குடும்பத்தினர் அனுமதி இன்றி எந்த ஒரு படமோ, வெப் சீரிஸோ எடுக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் மீடியாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் மேனன் எந்த அரசியல்வாதியை மையமாக வைத்து வெப் சீரிஸ் எடுத்துள்ளார் என்பதை தெரியப்படுத்துவார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.