இளசை சுந்தரம் என்றால் தெரியாத வானொலி நேயர்கள் கிடையாது. சிறந்த வானொலி பேச்சாளர். எதையும் நகைச்சுவையாக விவரிப்பது இவர் பாணி.
பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், நகைச்சுவையாளர் , ஆன்மிக அறிஞர், அகில இந்திய வானொலி இயக்குனர், கவிஞர், நாடக ஆசிரியர், பாரதியாக வேடமிட்டுத் தோன்றும் நடிகர், பல வெளிநாடுகளில் தமிழின் புகழைப் பரப்பியவர் போன்ற பன்முகம் கொண்டவர்.
முப்பது ஆண்டு காலம் தமிழகத்தின் பல்வேறு வானொலி நிலையங்களில் பணியாற்றியவர். சென்னை வானொலியின் கல்வி ஒலிபரப்புப் பிரிவுப் பணி. திருச்சி வானொலியில் குழந்தைகள் நிகழ்ச்சிக்கான வானொலி அண்ணா இலக்கிய நிகழ்ச்சிகளின் அமைப்பாளர், வானொலி நாடகங்களை எழுதியும், இயக்கியும் உள்ளார்.
‘நகைச்சுவை அரங்கம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களைக் கவர்ந்தார். ‘மொழியாகும் ஒலிகள்’ என்ற புதுமை நிகழ்ச்சியைப் போட்டிக்காகப் படைத்து அகில இந்திய அளவில் பரிசுடன், ஆகாஷ்வாணி என்ற சிறப்பு விருது பெற்றார். திரு. தென்காசி சுவாமிநாதன் அவர்கள் வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் சொல்லி வந்த ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியை ஐந்து ஆண்டுகள் வழங்கியவர்.