இந்தியாவில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,776 லிருந்து 39,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,223 லிருந்து 1,301 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,018 லிருந்து 10,633 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு தரப்பு பல கட்டுபாட்டுகளுடன் காய்கறி சந்தைகளை இயங்க அனுமதி அளித்துயிருந்தது. குறிப்பாக சென்னையின் மிக பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட் இயங்க அனுமதி அளித்துயிருந்தது, அதுவும், 600 கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்களை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்பட்டுயிருந்தது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்டவாரியாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம். அதில், சென்னை – 52 பேருக்கும், அரியலூர் – 22 பேருக்கும், கடலூர் – 17 பேருக்கும், காஞ்சிபுரம் – 7 பேருக்கும், விழுப்புரம் – 20 பேருக்கும், பெரம்பலூர் – ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கோயம்பேடு சந்தை நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரே, முதன் முதலில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.