cinema news
ஹிப்ஹாப் தமிழாவின் யூ டியூப் சேனல் மீட்பு
தமிழில் வித்தியாசமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. 2017ஆம் ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.
தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ என்ற படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்து வருகிறார் சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. அதிலிருந்த அவரது ஏராளமான ஆல்பம் பாடல்கள் அனைத்தும் மாயமாகின. 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட அந்த சேனலில் பெயரும் மாற்றப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் நேற்று இரவு அவரது யூடியூப் பக்கம் மீண்டும் மீட்கப்பட்டது. அதிலிருந்து வீடியோக்களும் தற்போது மீண்டும் அப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இதனை ஹிப் ஹாப் ஆதி தன்
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘நான் மீண்டும் வந்துவிட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ள ஆதி, யூடியூப் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.