மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியமாக சீசன் நேரமான ஏப்ரல், மே மாதங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இங்கு படகு சவாரி, குணா குகை, தற்கொலைப்பாறை, பில்லர் ராக், தொப்பி தூக்கி பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோவில் என பல்வேறு இடங்கள் உள்ளது. இருப்பினும் யாரும் எதிர்பாரா வண்ணம் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக தனியார் ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஹரிஹரன் கூறியது:
இந்த ஹெலிகாப்டர் நிறுவனத்தை ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்கள் கோயம்புத்தூரில் நடத்தி வருகின்றனர். கொடைக்கானலில் முதல்முறையாக ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளோம். அவசர கால மருத்துவ சேவைக்கும் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டரில் கொடைக்கானல் மலை அழகை ரசிக்க ஒரு நபருக்கு 6000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 15 நிமிட பயணம்தான். நாளை நவம்பர் 3 முதல் இந்த சேவை தொடங்குகிறது.