Connect with us

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Latest News

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடதமிழக கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி இது நகரக் கூடும்.

இதன் காரணமாக, 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

7-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.

பாருங்க:  மனைவி தூக்கு மாட்டிக்கொள்வது கூட தெரியவில்லை – போதை தெளிந்த கணவன் எடுத்த முடிவு !

சூறாவளிக் காற்று

6-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும்.

7-ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More in Latest News

To Top