தமிழக காவல்துறைக்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த 8000க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் இதுவரை 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு திருப்பி விட்ட நிலையில் தற்போது 800க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலேயே அதிகமான பாதிப்பு தலைநகரான சென்னையில்தான் உள்ளது. அங்கு இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக காவல்துறையில் ஏற்கனவே தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாகப் பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் என்ற உத்தரவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊரடங்கு பணிகளைக் கவனிக்க இன்னும் அதிக போலிஸார் தேவையென்ற சூழல் உருவாகியுள்ளது. இப்போது பணியில் இருப்பவர்களும் ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலை செய்து வருகின்றனர்.