cinema news
அன்று கோ பேக் மோடி- இன்று விருந்தினர்- திமுகவினர் குறித்து தினகரன் கிண்டல்
அன்று கோ பேக் மோடி, இன்று விருந்தினரா? திமுகவினரின் திடீர் ஞானோதயம் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது என்று டிடிவி தினகரன் கிண்டல் செய்துள்ளார்.
11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை சிலர் பதிவிடத் தொடங்கினர்.
இதற்கு திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, ”தமிழகத்திற்கு விருந்தினராக வருகை தரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை, திமுக எந்தக் கட்சிக்கும் எதிரியில்லை, நமது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ள நிலையில் அவர் இப்போது நமது விருந்தினர்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்றைய தனது ட்விட்டர் பதிவில், இதெல்லாம் நகைச்சுவையாக உள்ளது என்று கிண்டலடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
”திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற திமுக, பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று; ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என திமுக போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி.
இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக் கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும் தவறு என இதன் மூலம் இப்போது திமுக ஒப்புக்கொள்கிறதா? அன்றைக்கு, ”இதெல்லாம் தேவையில்லாத வேலை” என்று சொன்ன எங்களைப் போன்றவர்களைப் பார்த்து, ”பாஜகவைக் கண்டு பயப்படுகிறார்கள்” என்று திமுகவினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சித்தார்கள். அப்படியென்றால், இப்போது பாஜகவையும், பிரதமர் மோடியையும் பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.