Gang attacked college studet in sivagangai - tamilnaduflashnews.com

கல்லூரிக்குள் புகுந்து மாணவனை வெட்டிய கும்பல்…

சிவகங்கையில் கல்லூரிக்குள் புகுந்த கும்பல் ஒரு மாணவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மன்னர் துரைசிங்க அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வருபவர் அஜித்ராஜா. அவர் கல்லூரியில் இருந்த போது, இன்று மாலை மூன்றுபேர் கொண்ட கும்பல் கல்லூரியில் புகுந்து, அவரை விரட்டி விரட்டி வெட்டியது.

இதைக்கண்ட மாணவர்கள் தெறித்து ஓடினர். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது. இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

படுகாயமடைந்த மாணவனை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.