Entertainment
ரஜினி பட பிரபல பட தயாரிப்பாளர் மரணம்
ரஜினிகாந்தை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் டி.ராமாராவ் காலமானார்.
என்டிஆர், ஏஎன்ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவரான ராமாராவ், தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, ஆலுமகளு, யமகோலா, பிரசிடெண்ட் காரி அப்பாயி, இல்லாலு, பண்டனி ஜீவிதம், பச்சனி காபுரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
1979-ல் இந்தித் திரையுலகில் நுழைந்த டி.ராமாராவ் அமிதாப் பச்சன், ஜீதேந்திரா, தர்மேந்திரா, சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா, மிதுன் சக்கரவர்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அந்த கானூன் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
ஜூடாய், ஜீவன் தாரா, ஏக் ஹி புக், அந்த கானூன், இன்குலாப், இன்சாப் கி புகார், வதன் கே ரக்வாலே, தோஸ்தி துஷ்மணி, நாச்சே மயூரி, ஜான் ஜானி ஜனார்தன், ராவன் ராஜ், முகாப்லா, ஹத்காடி, ஜங் போன்ற சூப்பர் ஹிட் இந்தியில் திரைப்படங்களை இவர் தயாரித்தார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, சென்னையை சேர்ந்தவர்கள் இந்தி படங்களை தயாரிக்கும் முறையான “மதராஸ் மூவி”-க்கு வழிவகுத்து அகில இந்திய சந்தைக்கு காரணமாக இருந்தவர் ராமாராவ் ஆவார்.
இந்தியத் திரைப்படத் துறையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் ராமாராவ் பெற்றார். தமிழில் ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் பேனரில் தமிழ் படங்களை தயாரித்த இவர், விக்ரம், விஜய், ஜெயம் ரவி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்தார்.
இதில் தில், யூத், அருள், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், மலைக்கோட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்கள் இவர் தயாரித்தவையே. இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃப்ளெக்சிபிள் குழாய்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ் பிரைவேட் லிமிடெட் தலைவராகவும் இவர் இருந்தார்.
இந்நிலையில், தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசிக்கும் டி.ராமாராவ் வயது மூப்பு காரணமாக அதிகாலை 12.30 மணியளவில் இறந்தார். இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, அஜய் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
