நீட் தேர்வில் பல மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டிருப்பதாக மாணவர் உதித் சூர்யா வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவகல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இந்த வழக்கை காவல் துறையினர் விசாரித்தனர். அதன்பின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து திருப்பதியில் இருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். தன் மகனுக்கு பதிலாக வேறு ஒருவர் நீட் தேர்வை எழுதுவதற்காக உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் கேரளாவை சேர்ந்த ஒரு இடைத்தரகரிடம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்ததை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார். தற்போது அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், போலீசாரிடம் உதித் சூர்யா அளித்துள்ள வாக்குமூலத்தில் ‘என்னைப் போல் 60 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். உங்களால் அவர்களை கைது செய்ய முடியுமா?’ என கோபமாக கேட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.