மறைந்த முதல்வர் மற்றும் நடிகர் எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியவுடன் அதில் 3வது பெண் உறுப்பினராக சேர்ந்தவர் லதா. எம்.ஜி.ஆரின் மனதில் இவருக்கு எப்போதும் நிரந்தர இடம் உண்டு. ஆனாலும், எம்.ஜி.ஆரே அழைத்தும் லதா தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.
சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், தற்போது மீண்டும் தமிழகத்தில் செட்டில் ஆகி சில சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது அதிமுக கூட்டங்களில் கலந்து கொண்டும் வருகிறார்.
எனவே, இவருக்கு கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பதவி வழங்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த பதவியில் ஏற்கனவே நாஞ்சில் சம்பத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.