திமுக பொருளாளர் துரைமுருகனும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியுமான ரவீந்திரநாத் குமாரும் சந்தித்து சிரித்து பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிமுகவும், திமுகவின் நேர் எதிரானவை. அதிமுகவினரும், திமுகவினரும் நட்பு பாராட்டவே மாட்டார்கள். மறைந்த ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அதிமுகவின், திமுகவினரோடு சிரித்து பேசினாலோ, அவர்களின் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டாலோ அடுத்த நிமிடம் கட்சி மற்றும் பதவிலிருந்து தூக்கி எறிந்துவிடுவார். அவ்வளவு ஏன்.. ஸ்டாலினிடம் சிரித்து பேசினார் என்பதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் முதல்வர் பதவியையே சசிகலா பறித்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் அந்த நிலை மாறியுள்ளது. சட்டசபையில் திமுகவினரும், அதிமுகவினரும் சிரித்து பேசி நட்பு பாராட்டி வருகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்திற்காக வந்த துரைமுருகனும், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, ரவீந்திரநாத்தை அக்கறையுடன் துரைமுருகன் விசாரித்தார். இதில் மகிழ்ச்சியடைந்த ரவீந்திரநாத், துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதில் நெகிழ்ந்து போன துரைமுருகன் ரவீந்திரநாத்தை ‘ நீ நல்ல வருணும்யா’ என மனதார வாழ்த்தினார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. இந்த ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை பலரும் பாராட்டி வருகின்றனர்.