Chennai Corporation
Chennai Corporation

சென்னையில் கொரொனா தொற்று அதிகரிப்பால், சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

தமிழகத்தில், சென்னையில் தான் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அறிவித்த தகவலின்படி, இதுவரை சென்னையில் மட்டுமே சுமார் 12,203பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதிகளான திருவிக நகர், தண்டையார்பேட்டை, ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் நோய் தொற்று நாள்தோறும் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே சென்னை வர்த்தக மையம், நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்ற கொரொனா மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், சென்னையில் கொரொனா தொற்று அதிகரிப்பால், சென்னை மாநகராட்சி சில அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, கொரொனா தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் (8 மண்டலங்கள்) 3000 படுக்கை வசதிகளை கொண்டு தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் மீதும் உள்ள சுமார் 7 மண்டலங்களில் தலா 1,500 படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த உத்தரவை அவசரமாக எடுத்துக் கொண்டு மண்டல அலுவலர்கள் பணிகளை தொடங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகள் கொரொனா மையங்களாக அமைக்கப்பட்ட நிலையில், அவற்றை தவிர்த்து, மாநகராட்சி சமூக கூடங்கள், தனியார் கல்யாண மண்டபங்கள், நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றை கண்டறிந்து, அதனையும் கொரொனா மையங்களாக செயல்படுத்த வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகரட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.