ஆளுங்கட்சியாக வந்த பிறகும் திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகஅமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பாஜக தலைவர்அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக எம்.பி.க்களின் அராஜகம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் என்பவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம், பாஜகநிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரன் மீது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இவர் மீதும் கடுமையான வழக்கு பதிவு செய்து காவல் துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியாணி கடை முதல் டீக்கடை வரை திமுகவின் அராஜகத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆளுங்கட்சியாக வந்த பிறகும்கூடஅதே பழக்கத்தைதான் தொடர்கின்றனர். ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும், இவர்களது வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவில்லை.
இப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும்.
இதுபோன்ற நேரத்தில் அரசியல் பாரபட்சம் பார்க்காமல் காவல் துறை தனது கடமையை சரியாக செய்ய வேண்டும். ஞானதிரவியம் எம்.பி. மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டி இருக்கும் என்பதை காவல்துறைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.