நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன். தற்போது கட்சி நிர்வாகத்தை இவர்தான் கவனித்து வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டி இட்டது.
தற்போதும் வரும் சட்டசபை தேர்தலுக்கும் அந்த நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், பெரம்பலூரில் நடந்த தேமுதிகவின் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் தகுதி நமது கட்சிக்கு உண்டு.
அமையவுள்ள புதிய சட்டப்பேரவையில் தலைவரின் குரல் நிச்சயம் ஒலிக்கும். கூட்டணி குறித்து தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் நினைப்பதைத் தான் நாங்கள் நடத்திக் காட்டுவோம்.
எந்தச் சூழ்நிலையிலும் தேமுதிக தலைகுனிந்து போகாது. நிச்சயம் அரசியல் அரங்கில் நமக்கான இடத்தை நாம் பெற்றே தீருவோம்” என்றார்.

