கோகுலத்தில் சீதை 25வது வருடம்- படம் உருவான உண்மை சம்பவம் குறித்து இயக்குனர் அகத்தியன்

கோகுலத்தில் சீதை 25வது வருடம்- படம் உருவான உண்மை சம்பவம் குறித்து இயக்குனர் அகத்தியன்

இயக்குனர் அகத்தியனின் இயக்கத்தில் கடந்த 1996ல் வெளிவந்த திரைப்படம் கோகுலத்தில் சீதை. இப்படம் வெளிவந்து 25வது வருடத்தை நெருங்குவதால் இப்படம் குறித்து இயக்குனர் அகத்தியன் ஒரு சுவாரஸ்ய பதிவை தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார்.

அது 1972-73 ஆம் கல்வியாண்டு. நான் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி.அதாவது இப்போதைய +2.
சாந்தநாதபுரம் மூன்றாம் வீதியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தேன். தன் அறையை என்னுடன் பகிர்ந்துகொண்டவர் செல்லையா என்னும் அண்ணன். அவர் பி.ஏ.மூன்றாம் ஆண்டு மாணவர். அவர் காதலித்த பெண் பெயர் ராணி.
ஒருநாள் நான் கல்லூரிவிட்டுத்திரும்பும்போது அறையில் அவர் அழுதுகொண்டிருந்தார்.
ராணிக்கு மறுநாள் காலையில் திடீர் கல்யாணம். அவளில்லாமல் வாழ்வில்லை.தற்கொலைதான் முடிவு என்றவரிடம் நம்பிக்கைகொடுத்துவிட்டு நானும் மாரிமுத்து என்பவரும் சைக்கிள் எடுத்துக்கொண்டு பதினைந்து மைலுக்குக்கு அப்பால் இருந்த அந்தக் கிராமத்துக்குப்போய் மிகுந்த சிரமங்களுக்கிடையே அந்தப் பெண்ணைச் சந்தித்து இரவு பன்னிரெண்டு மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறு. நாங்கள் வந்து அழைத்துச்செல்கிறோம் என்று சொல்லிவிட்டு புதுக்கோட்டை விடுதிக்குத் திரும்பினோம். செல்லையா அறையில் இல்லை. பக்கத்து சினிமாதியேட்டருக்குப் போயிருந்தார். தியேட்டரில் சிலைடு போட்டு செல்லையாவை வெளியே வரவைத்தோம். அவருடன் அவர் அண்ணனும் இருந்தார். நடந்ததைச் சொல்லி பெண்ணை இரவு 12 மணிக்கு அழைத்துவரவேண்டும் என்று சொன்னேன். செல்லையா அமைதியாகச் சொன்னார். “அண்ணன் அந்தப் பொண்ணை மறந்துடச் சொன்னாரு.நான் மறந்துட்டேன்”.
அங்குதான் I.C மோகன் பிறந்தான்.
அவரின் அண்ணன் கேட்டார்.
“பொண்ணு கூப்பிடப் போனது யாரு?”.
“நாந்தான்”
” அப்ப நீயே கல்யாணம் பண்ணிக்க”
இந்த வசனம் அப்படியே கோகுலத்தில் சீதையில் இருக்கும்.
1973 ல் நடந்த இந்தக்கதையை 1996 ல் படமாக்கினேன். அந்தக் கோகுலத்தில் சீதை இன்று 25 வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறாள். இன்றும் தம் நெஞ்சங்களில் இருத்தி என்னைப் போற்றும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் பாதம் பணிந்த நன்றிகள்.
L AXMI MOVIE MAKERS திரு முரளிதரன்,மறைந்த திரு.சாமிநாதன்,திரு வேணுகோபால் மூவருக்கும் வாழ்நாள் நன்றிகள்.
ரிஷிக்கும்,நிலாவுக்கும்,I.C.மோகனுக்கும் வாழ்த்துகள்.
அன்பு தமிழ் நெஞ்சங்களே நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நீங்க மாட்டேன். மீண்டும் சந்திப்பேன்.
அன்புடன்
அகத்தியன்.
இதுதான் அந்த பதிவு