இந்தியாவில் கொரொனா பீதியால் அனைத்து வர்த்தக ரீதியான தொடர்பும், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் முடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஜீன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், என்றும் பள்ளிகளை மறுபடியும் எப்போது திறப்பது என்பது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதனையடுத்து, 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர், ஆகவே 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறுகின்றன என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.