பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டம்
அடிக்கடி பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட முடியாது என மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
சிவகாசியில் கடந்தாண்டு நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் கார்த்தீஸ்வரி, ஹமீதா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரான ராமநாதன், அவர் மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், “இந்த வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட முடியாது. அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது”
என உத்தரவிட்டுள்ளார்.