Corona (Covid-19)
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் தினசரி கொரோனா 25க்கு கீழே இருந்த நிலையில், 30 ஆக அதிகரித்துள்ளது.
பொது இடங்கள்,கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். முக சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லி, உத்தரப் பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆகவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,’என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல், இந்தியாவில் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உத்தரப் பிரதேசம், மிசோரம், மராட்டியம், ஹரியானா மற்றும் டெல்லிக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.