Corona (Covid-19)
கொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் அது கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படாமல், உரிய இழப்பீடு இறந்தவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதில்லை என கொரோனா உயிரிழப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், உயிரிழப்போருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தீபக் பன்சால் மற்றும் கவ்ரவ் பன்சால் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கிற்கு பதிலளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, மரபணு பரிசோதனை, அண்டிஜென் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளால் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டோ அல்லது தக்க மருத்துவர் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக சான்றளித்தாலோ அது கொரோனா உயிரிழப்பாக எடுத்துகொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தொற்றினால் உயிரிழப்பவர்களில் 95% பேர் 25 நாட்களுக்குள் உயிரிழந்துவிடுவதாக ஆய்வுகள் கூறினாலும், 30 நாட்களுக்குள் ஏற்படும் மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அவர் 30 நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றிருந்தாலும் அது கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கொரோனா பாதித்த நபர் நஞ்சு உட்கொண்டோ, தற்கொலை, கொலை, விபத்து இவற்றினால் உயிரிழப்பு நேர்ந்தால் அம்மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அப்பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.