பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது என சென்னையிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.
சென்னை, வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் தீக்ஷித் நேற்று (மார்ச்.28) பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் உதவியாளர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகன பாதுகாப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அதிகாரிகள் நேற்று (மார்ச்.28) ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் இது குறித்து தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், “பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், “பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது” எனவும் தெரிவித்துள்ளார்.