செட்டிநாடு எனப்படும் காரைக்குடி தேவகோட்டை பகுதிகளில் கந்தரப்பம் எனும் பலகாரம் இல்லாது பல விசேஷங்கள் நிறைவு பெறாது.
கந்தரப்பம் என்றால் என்ன அந்த கந்தரப்பம் எப்படி செய்வது என பார்ப்போம்.
கந்தரப்பம் செய்ய தேவையான பொருட்கள் : பச்சை அரிசி – ஒரு டம்ளர், உளுத்தம் பருப்பு – கால் டம்ளர், வெல்லம் – முக்கால் டம்ளர், ஏலக்காய் – 3, எண்ணெய் – கால் லிட்டர், உப்பு –கால் ஸ்பூன்.
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரிசியும், உளுத்தம் பருப்பும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது நன்றாக ஊற வேண்டும்.
நன்றாக ஊறிய அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மூன்று ஏலக்காய் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்ததை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் பொடி செய்த முக்கால் டம்ளர் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். வெள்ளம் சேர்த்தவுடன் அரிசி மாவு சற்று இளகி கரண்டியில் எடுத்து ஊற்றும் பதத்திற்கு வந்துவிடும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் ஒரு குழம்பு கரண்டியைப் பயன்படுத்தி மாவினை அள்ளி ஊற்ற வேண்டும் சிறிது நேரத்தில் அப்பம் உப்பி வரும். அப்பொழுது அப்பத்தினை திருப்பிவிட வேண்டும். இரண்டு புறங்களிலும் நன்றாக சிவந்து வந்தவுடன் அப்பதினை வெளியில் எடுக்க வேண்டும். ஒரு அப்பம் பொறிந்த பின்னரே அடுத்த அப்பம் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒவ்வொன்றாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது பரிமாறலாம்.