cinema news
நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்க வாய்ப்பு
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ளது மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை. சென்னைவாசிகளின் சுகமான சொத்து இந்த மெரினா கடற்கரைதான். கடும் மன அழுத்தத்தில் பணிபுரியும் சென்னைவாசிகளுக்கு காங்க்ரீட் கட்டிடங்களுக்கு நடுவே இயற்கையை ரசிக்க முடியாமல் அந்த காற்றை அனுபவிக்க முடியாமல் அவதிப்படும் பல சென்னைவாசிகளுக்கு மெரினா கடற்கரையே சொர்க்கம்.
அதுவும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் கூட்டம் சும்மா அள்ளிவிடும். எல்லா மக்களும் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் சூழ சென்னை மெரினா கடற்கரைக்கு பொழுது போக்க வருவார்கள்.
இப்படிப்பட்ட மெரினா கடற்கரைக்கு செல்ல கடந்த 6 மாத காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் என்னவென்றால் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாதான் என்பதை விளக்க வேண்டியதில்லை.
கடற்கரைக்கு மக்களை அனுமதிப்பது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் மெரினா கடற்கரைக்கு மக்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.