வித்தியாசமான சுவை மிகு கத்தரிக்காய் பொறியல்

வித்தியாசமான சுவை மிகு கத்தரிக்காய் பொறியல்

சுவையான கத்தரிக்காய் பொறியல் செய்ய தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 4, பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 10 பல், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு தேவையான அளவிற்கு.

 

முதலில் கத்தரிக்காய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி 1 ஸ்பூன் மோர் கலந்த தண்ணீரில் உடனே போட்டுக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் வெட்டியவுடன் கறுத்துப் போகலாம் என்பதால்  இது போல் செய்வதால் நீண்ட நேரம் கறுக்காமல் இருக்கும். இல்லை என்றால் வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் பொழுது நீங்கள் கத்திரிக்காயை மடமடவென வெட்டி சேர்த்துக் கொள்வது நல்லது. பூண்டை தட்டி வைத்துக் கொள்ளுங்கள், மற்ற காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

 

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்குங்கள். பூண்டு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் சமயத்தில் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய்களை தண்ணீரின்றி நன்கு வடிகட்டி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடத்தில் சட்டென இந்த காய்  வெந்து விடும், எனவே இதற்கு தண்ணீரை தெளித்து வேக வைக்கத் தேவையில்லை. தண்ணீர் தெளித்தால் சுவை நன்றாக இருக்காது.

கத்திரிக்காய் லேசாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை கலந்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து கொள்ளுங்கள் பின்னர் 2 நிமிடம் மூடி போட்டு மூடி வைத்தால் போதும். அதன் ஆவியிலே சட்டென கத்திரிக்காய் சூப்பராக வெந்து அதீத சுவையுடன் கிடைத்துவிடும். இந்த பொரியலை மோர் குழம்பு, மோர் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.