நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்து வனப்பகுதிகளில் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை அருகே வனப்பகுதிக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து வேட்டையாடி வருவதாக வனத்துறையினர் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து வனப் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கொகறங்காடு பகுதியில் வசிக்கும் புஷ்பராஜ், நவநீதகிருஷ்ணன், முருகன் ஆகியோர் தங்களது வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்து அதன் மூலம் வனப்பகுதிகளில் வேட்டையாடி வந்தது கண்டறியப்பட்டது.
அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது நாட்டுத் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வெடிமருந்துகள், பறவைகள் விலங்குகளைப் பிடிக்க வைத்திருந்த வலைகள் போன்றவை பிடிபட்டன. இதனை அடுத்து அவர்கள் மூவரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடமிருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.