Published
12 months agoon
பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 5 பேரை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
கடந்த 19-ம் தேதி நள்ளிரவு மெரினா ராதாகிருஷ்ணன் சாலையில் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட 6 பேரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களது இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் இருந்து ராயபுரம் மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பைக் ரேஸில் ஈடுபட்டது தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டிவின் குமார், அதேபகுதியைச் சேர்ந்த மோவின், ஹரீஷ் குமார், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, திருவொற்றியூரைச் சேர்ந்த சல்மான் என்பது தெரிந்தது. அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரேஸுக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைதான டிவின்குமார் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
பைக் ரேஸ் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம். மீறி பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டப்பூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம்.
சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதன் மூலம், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பெற்றோர், 18 வயது நிரம்பாத தங்களது பிள்ளைகள் இருசக்கர வாகனங்களை இயக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மீறி வாகனங்களை ஓட்டும் இளஞ்சிறார்களின் பெற்றோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
இது போல தென்காசி பகுதிகளிலும் பைக் ரேஸ் செய்து வீலிங் செய்து வந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.