Published
1 year agoon
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு, கடலூரைச் சேர்ந்த ஷைன் இந்தியன் சோல்ஜர் சோசியல் நல அறக்கட்டளை சார்பில், ரூ.2.50 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடைஉள்ள மார்பளவு ஐம்பொன் சிலை, கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஐம்பொன் சிலைக்கான வார்ப்பட நிகழ்வு கும்பகோணம் அரியத்திடல் ராமசாமி சிற்பக்கூடத்தில், அறக்கட்டளை நிறுவனர் மிலிட்டரி பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பிபின் ராவத் உருவப்படத்தை வைத்து பூர்ணாஹூதி நடத்தப்பட்டு, பின்னர் ஐம்பொன் சிலைக்கான வார்ப்பு நடைபெற்றது.
நிகழ்வில், சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் பாலசுப்ரமணியன், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள், கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், ஸ்தபதி ராம்குமார்,தொழிலதிபர்கள் சவுமியநாராயணன், கடலூர் வி.பாலு, சிதம்பரம் சாம்போசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுரேஷ்கண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் பி.எம்.அரவிந்த், ரங்காசேட், சுபேதார் குமார், சாரல்சங்கர், கும்பகோணம் முன்னாள் படைவீரர்கள் நலச் சங்கத் தலைவர் மேஜர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அறக்கட்டளைத் தலைவர் மிலிட்டரி பாபு கூறியது: நாட்டிலேயே முதன்முறையாக ஒரு ராணுவ வீரருக்கு தமிழகத்தில் ஐம்பொன் சிலையை உருவாக்கி வருகிறோம். இப்பணி நிறைவடைந்ததும், பிபின் ராவத் ஐம்பொன் சிலையுடன் சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக 6 மாநிலங்கள் வழியாக டெல்லிக்கு கொண்டுசென்று, இந்தியா கேட் அருகே போர் வீரர்கள் நினைவிடத்தில் வைப்பதற்காக, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி ஜெனரல் நரவானே ஆகியோர் முன்னிலையில் சிலையை ஒப்படைக்க உள்ளோம் என்றார்.