இந்தியாவில், கொரொனா பாதிப்பின் ஆரம்பக் காலகட்டமான, கடந்த மார்ச் 22ம் தேதி முதல் இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, மாநில எல்லைகள் முதல், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மால்கள், கோயில்கள், சுற்றுலா தளங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் முற்றிலுமாக முடக்கியது.
இதன் தொடர்ச்சியாக, பஸ், ரயில், விமான சேவை, ஆட்டோ, டாக்ஸி என அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டது. இதனால், ஏற்கெனவே ரயில்களில் டிக்கெட்களை முன்பதிவு செய்தவர்களின் பயண டிக்கெட்டை ஊரடங்கால், ரயில்வேதுறை ரத்து செய்தது. இந்நிலையில், 100% டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற ஏற்பாடு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த, மார்ச் 22ம் தேதிக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும், http://irctc.co.in என்ற இணையதளம் மூலம் 100% டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.