Latest News
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்
கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கலைஞருக்கு அடுத்தகட்டத்தில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வந்தார்.
அந்த காலக்கட்டத்தில் மின் தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. அந்த நேரத்தில் இவர் பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தற்போது வயதாகிவிட்டதால் அரசியலுக்கு ஓய்வு கொடுத்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்து விட்டதாக தவறுதலாக தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஆற்காட்டார் மகன் கலாநிதி கூறியிருப்பதாவது, தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார் என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்! என கூறியுள்ளார்.
