வித்தியாசமான கதைக்களத்துடன் எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான பல தமிழ் திரைப்படங்களை பற்றி தொடர்ந்து வர இருக்கும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம்.
கடந்த 1990 பிப்ரவரி 23ல் வெளிவந்த திரைப்படம் அரங்கேற்ற வேளை. பிரபு, ரேவதி, வி.கே ராமசாமி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தை பாஸில் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு முன் தமிழில் வருஷம் 16 படத்தை இயக்கி ஒரு பெரிய ஹிட்டை பாஸில் கொடுத்திருந்தார் இருப்பினும் அரங்கேற்ற வேளை ஏதோ ஒரு காரணத்தால் பெரிய அளவில் தமிழில் ரீச் ஆகவில்லை.
பாஸிலின் கதை இலாகாவில் பணியாற்றுபவர்கள் சித்திக் மற்றும் லால் , இவர்கள்தான் பாஸிலிடம் பல படங்களில் உதவி இயக்குனர்களாகவும் பாஸிலின் படங்களுக்கு கதை எழுதியவர்களாகவும் இருந்தனர்.இயக்குனர் சித்திக், ப்ரண்ட்ஸ் எங்கள் அண்ணா போன்ற படங்களின் இயக்குனராவார். லால் சண்டக்கோழி, மருதமலை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆவார்கள்.
மலையாளத்தில் வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்க் படத்தின் ரீமேக்தான் தமிழில் அரங்கேற்ற வேளையாக வந்தது. மலையாளத்தில் இப்படத்தை சித்திக் லால் இருவரும் இணைந்து இயக்கி இருந்தனர். பாஸில் தயாரித்து இருந்தார். தமிழில் இப்படத்தை பாஸிலே இயக்கினார்.
ஒரு தவறான இடத்திற்கு செல்லும் ஃபோன் கால், சக்தி நாடக சபா நடத்தும் விகே ராமசாமிக்கு வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஃபோன் காலில் குறிப்பிட்ட பெண்ணை கடத்த திட்டமிடுகிறார்கள் என தெரிந்து சக்தி நாடக சபாவில் குடியிருக்கும் பிரபு, விகேஆர், ரேவதி அந்த கடத்தல்காரனை மடக்கி, கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை, கடத்தல்காரர்களுக்கு கொடுக்கும் பணத்தை அபேஸ் செய்து அந்த பெண்ணையும் கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்ற எடுக்கும் முயற்சி செய்யும் கதையே அரங்கேற்ற வேளை.
இப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சம் நகைச்சுவை. நகைச்சுவை படமாக ஆரம்பத்தில் நகர்ந்தாலும் பின்பாதியில் பரபரப்பு, சென் டி மெண்ட் காட்சிகள் அதிகம் இருந்தன. இப்படத்தில் பழம்பெரும் நடிகர் வி.கே ராமசாமியின் நடிப்புதான் பெரிய அளவில் மக்களை கவர்ந்து இருந்தது. அவர் டயலாக் பேசும் விதமே அனைவரையும் கவரும் என்பதில் மாற்றமில்லை இப்படத்தில் பெரிய அளவில் வி.கே.ஆர் காமெடி செய்து இருந்தார். பிரபுவும், ரேவதியும் விகேஆருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் அல்ட்டிமேட்.
இளையராஜாவின் இசையில் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன், தாயறியாத தாமரையே,, ஆகாய வெண்ணிலாவே, மாமனுக்கும் மச்சானுக்கும் உள்ளிட்ட பாடல்கள் மெகா ஹிட் ஆகின.
தமிழில் வந்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. தமிழில் இப்படத்தை அரோமா மணி தயாரித்திருந்தார்.