பகலில் சமையல் வேலை...இரவில் திருட்டு - சென்னையை கலக்கிய மாற்றுத்திறனாளி கைது

பகலில் சமையல் வேலை…இரவில் திருட்டு – சென்னையை கலக்கிய மாற்றுத்திறனாளி கைது

சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பணம் திருடப்படுவதாகவும் அப்பகுதி போலீசாருக்கு புகார்கள் வந்தது. எனவே, அந்த கொள்ளையனை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

முதலில் அந்த பகுதிகளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அண்ணாநகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவு நேரங்களில் சந்தேகத்துக்குரிய ஒரு வாலிபர் சுற்றித்திருவது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் அரியலூரை சேர்ந்த சிவா என்பதும், அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது. மேலும், பகல் நேரங்களில் சமையல் வேலை செய்துவரும் அவர், ஆளில்லாத வீடுகள் மற்றும் கடைகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் அங்கு சென்று கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. மேலும், அவர் மீது திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.