Tamil Flash News
மீண்டும் வந்தது அரியஸ் முறை – அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மகிழ்ச்சி
பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியர்ஸை அடுத்த தேர்விலேயே எழுதும் முறைக்கு ஆட்சிக்குழு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 2017ம் ஆண்டு புதிய கல்வித்திட்டம் (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, பருவத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர் அடுத்து வரும் தேர்வில் தோல்வி அடைந்த பாடத்துக்கான தேர்வை எழுத முடியாது. அப்பாடத்துக்கான தேர்வு எந்த பருவத்தில் வருகிறதோ அப்போதுதான் எழுத முடியும்.
இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் மீண்டும் அரியர்ஸ் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆட்சிக்குழுவும் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, பழைய அரியர்ஸ் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, இனி வரும் காலங்களில் அரியர் தேர்வு எழுத காத்திருக்க வேண்டியதில்லை. அடுத்து வரும் பருவத் தேர்விலேயே எழுத முடியும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்துள்ளார்.
இது அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.